சென்னை: சிறைத்துறை பணியாளர்களின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய புதிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சிறைத்துறையில் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் முக்கியமான சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பணியிட மாற்றம் மற்றும் புதிய பதவி நியமனங்கள் தொடர்பான முடிவுகளை வெளிப்படையாக மேற்கொள்ள சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் புதிய வாரியத்தை அமைத்துள்ளார்.
சிறைத்துறை ஐஜி தலைமையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் கோரிக்கைகள், சேவைத் தேவைகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஆய்வு செய்து முறையான தீர்வுகளை வழங்குவதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி நியமனங்களில் தெளிவான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை சிறைத்துறை பணியாளர்களிடையே உருவாகியுள்ளது.