இஸ்லாமாபாத்: சீக்கிய பக்தர்களுக்கு இலவச விசா… பாகிஸ்தானில் உள்ள மத தலங்களுக்கு செல்ல, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சீக்கிய பக்தர்களுக்கு, 30 நிமிடங்களுக்குள், ஆன்லைனில் இலவச விசா வழங்கப்படும்,” என, அந்நாட்டு உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்துறை அமைச்சராக உள்ள மொஹ்சின் நக்வி, 44 சீக்கிய பக்தர்கள் அடங்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவை, லாகூரில் சமீபத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்பின், அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியதாவது: பாகிஸ்தானில், சீக்கியர்கள் புனிதமாக கருதும் சில குருத்வாராக்கள் உள்ளன. இதற்கு உலகம் முழுதும் இருந்து ஏராளமான சீக்கியர்கள் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதில் சீக்கிய பக்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இனி அந்த பிரச்னை இருக்காது. சீக்கியர்களுக்கான விசா நடைமுறையை ஆன்லைன் வாயிலாக எளிதாக்கி உள்ளோம். அதன்படி, பாகிஸ்தானுக்கு வரும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சீக்கிய பக்தர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நிமிடங்களுக்குள் எவ்வித கட்டணமுமின்றி விசாக்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். சீக்கிய சமூகத்திற்கு அதிக வசதிகளை வழங்குவதே அரசின் முன்னுரிமை. முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா புனிதமானது போல, சீக்கியர்களுக்கு பாக்., புனிதமானது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பல்வேறு பாரம்பரிய தலங்கள் திறக்கப்படும். இதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை.
பாகிஸ்தானுக்கு வருகை தரும் சீக்கிய பக்தர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு, 1 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.