இஸ்லாமாபாத்: வரும் 11-ந்தேதி இம்ரான் கான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (72) கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இம்ரான் கானை விடுதலை செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த கைபர் பக்துன்க்வா முதல்-மந்திரி அலி அமீன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி(பி.எம்.எல்.-என்) தலைமையிலான மத்திய அரசை கண்டித்து சிறையில் இருந்தபடியே போராட்டத்தை தலைமையேற்று நடத்த உள்ளதாக இம்ரான் கான் அறிவித்தார்.
இந்த நிலையில், வரும் 11-ந்தேதி இம்ரான் கான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பான விரிவான தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.