டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம்… ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்தார். இது தொடர்பாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அணுக்கரு பரவாமை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை மீறியுள்ளது.
இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு கடும் விளைவுகள் ஏற்படும். ஐ.நா உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடத்தை மீறல் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும். ஐ.நா சாசனம் மற்றும் அதன் விதிகளின்படி, சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்ததாவது. “ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதும், அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தான் அமெரிக்காவின் முதல் நோக்கம். அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.
மத்திய கிழக்கு பகுதியின் கொடுங்கோல் நாடான ஈரான் இப்போது அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அடுத்தடுத்த தாக்குதல் மிக பெரியதாகவும், மிக எளிதாகவும் இருக்கும் என எச்சரிக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் பேசி வருகிறது.
இனி இது தொடரக்கூடாது. ஒன்று ஈரானில் அமைதி ஏற்பட வேண்டும். அல்லது அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பின் தாக்கம் கடந்த 8 நாட்களாக ஈரான் சந்தித்து வரும் நிலையை காட்டிலும் மோசமாக இருக்கும். அங்கு தாக்குதல் நடத்துவதற்கான நமக்கு ஏராளமான இலக்குகள் உள்ளன. அமைதி ஏற்படவில்லை என்றால் அந்த இலக்குகளை துல்லியமாக, துரிதமாக, திறம்பட தாக்குவோம்.
இந்த நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். இதற்கு முன்பு யாரும் இப்படி இணைந்து செயல்பட்டது கிடையாது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.