மும்பை: இளம் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்குவதே கனவு என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் தலைவனாக உருவாகத் தயாராகி வருவதாகவும், தற்போதைய சூழலில் ஃபிட்னஸ் மற்றும் திறமைகளை மேம்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் ஆக இருப்பதால், 2026 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 அணியின் கேப்டன்சியையும் அவர் ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய முகமாக உருவாகி வருகிறார். இந்நிலையில், ஜெய்ஸ்வால் இந்தியா மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து அசத்தி வரும் ஜெய்ஸ்வால், கேப்டன்சி பொறுப்புக்கு ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக ஆடி, கேப்டன்சி வாய்ப்பு பெற கோவா அணிக்கு இடம்பெயர முடிவு எடுத்தார். ஆனால் மும்பை அணி சமாதானம் செய்து அவரை பின்வாங்க வைத்தது. அதேபோல் ராஜஸ்தான் அணியிலும் கேப்டன்சி வாய்ப்புகள் இருந்தாலும், உரிமையாளர்களின் தலையீடு காரணமாக ரியான் பராக் அந்த பதவியை பெற்றார்.
ஜெய்ஸ்வால் பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் தலைவனுக்கான பண்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்றும், ஒருநாள் கேப்டனாக நிச்சயமாக களமிறங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பிசிசிஐ நிர்வாகம் சுப்மன் கிலை வேகமாக உருவாக்கும் சூழலில், ஜெய்ஸ்வால் துணைக் கேப்டன்சியாக விரைவில் பொறுப்பேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.