சென்னை : இன்றும், நாளையும்: தமிழ்நாடு முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில்பெயர் சேர்க்க, நீக்க, திருத்த வாய்ப்பு உள்ளது.தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும் (ஜனவரி 3, 2026) நாளையும் மாநிலம் முழுவதும் நடைபெறுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஏதுவாக, மாநிலம் முழுவதும் சுமார் 75,000 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவர்களில் 66 லட்சம் பேர் இடம்மாறிச் சென்றவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு ஏதுவாக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், இது இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களாகும். தற்போது வரை சுமார் 7 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த இரண்டு நாள் முகாமில் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.