சென்னை: 161 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்… பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் கடற்கரைப் பகுதிகளில் மூன்று நாட்களில் சுமார் 161 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கடற்கரைகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் நாள்தோறும் சுழற்சி முறையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனொரு பகுதியாக பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக் கூடிய கடற்கரை பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களில் மட்டும் 160 புள்ளி 83 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மெரினா கடற்கரையில் 116 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதால், கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது குப்பைக் கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.