தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அறுமலைக்கோட்டையில் இயற்கை விவசாயி தங்கராசு வயலில் கருப்பு கவுனி நெல் சாகுபடி அறுவடைப்பணிகளை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் நேரடி செயல் விளக்க பயிற்சி பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அறுமலைக்கோட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருபவர் தங்கராஜ். இவரது வயலில் நேற்று கருப்பு கவுனி நெல் அறுவடைப்பணிகள் தொடங்கின. இந்நிலையில் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் ஈச்சங்கோட்டை டாக்டர்.எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் அர்ஜுன், அஸ்வின் குமார் , ஆஷ்லின், அரவிந்தன், ஆதில், பெனி தேவராஜா , அபிமித்ரன், தரணித், ஆல்வின், அப்பாஸ் அலி (லடாக்) , ஆதர்ஷ் குமார் ( பீகார்), ஆதர்ஷ் குமார் சவுத்ரி ( மேற்கு வங்கம்) , ஷ்ரவன் குமார் ( தெலுங்கானா) மாணவர்கள் நேரடியாக வயலுக்கு வந்து செயல்விளக்க பயிற்சி பெற்றனர்.
அவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பெருமைகள், இதனால் கிடைக்கும் நன்மைகள் உட்பட பல்வேறு வேளாண் தகவல்களை இயற்கை விவசாயி தங்கராசு விளக்கி கூறினார்.
தொடர்ந்து அறுவடைப்பணிகளை மாணவர்கள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், இயற்கை சாகுபடி முறையில் கிடைக்கும் லாபம், நன்மைகள் உட்பட பல தகவல்களை அறிந்து கொண்டோம். இது எங்கள் கல்விக்கு மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளது என்றனர்.