தஞ்சாவூர்: டெல்டா மாட்டங்களில் தாளடி பருவ நெற் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி வரை காவிரி நீர் திறந்து விட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜத்திடம் கோரிக்கை மனு அளித்த சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அக்டோபர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மீண்டும் பெரும் பொருட்செலவில் காலம் கடந்து சாகுபடி தொடங்கப்பட்டதால், பிப்ரவரி இறுதி வரையிலும் தண்ணீர் தேவைப்படுகிறது.
தற்போது ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கருகும் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் மேட்டூர் அணையைத் திறந்து, பிப்ரவரி 20 ஆம் தேதி வரை பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை விடுவித்து, தேவையான பகுதிகளுக்கு முறைப்படுத்தி வழங்க அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் பாண்டியன்.
அப்போது, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். திருப்பதி வாண்டையார், மண்டலத் தலைவர் துரை. பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலர் மகேஸ்வரன், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர்கள் ரவிச்சந்திரன், நிழல்தாசன், மாவட்டச் செயலர்கள் பிரபாகரன் (தஞ்சாவூர்), பத்மநாபன் (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.