தஞ்சாவூர்: கொளுத்தும் வெயிலையும் கண்டுக் கொள்ளாமல் மக்களை சந்தித்து தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் குழந்தைகள் கொடுக்கும் வரவேற்பு அட்டகாசமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவேன். தஞ்சை தொகுதியில் வென்று தலைவரிடம் சமர்ப்பிப்போம் என தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் பிரச்சாரத்தில் உறுதிபட தெரிவித்து வருகிறார். தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மாநகராட்சி 23,24,25 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தஞ்சை மேலவீதி கொங்கணேஸ்வரர் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழ ராஜவீதி, நாலு கால் மண்டபம், ஐயங்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாமன்ற உறுப்பினர் மேத்தா, நிர்வாகிகள் கார்த்தி, கொளஞ்சி, மகளிர் அணி பிரேமா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது வேட்பாளர் சண் ராமநாதன் பேசுகையில், திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகள் உலகெங்கும் பரவி உள்ளது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி காட்டி உள்ளார். வரும் தேர்தலிலும் தி.மு.க தான் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆக மு .க. ஸ்டாலின் வருவார். தஞ்சை மாநகராட்சியில் நான் மேயராக பொறுப்பேற்றது முதல் மாநகர் வளர்ச்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன் மாநகரில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 90 சதவீதம் சாலைகள் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிக்கும் சாலைகள் போட முயற்சி மேற்கொள்வேன்.

மாநகராட்சி முழுவதும் முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும். தஞ்சை மாநகராட்சியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான நவீன சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும். இளைஞர்களுக்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தஞ்சாவூரில் மேலும் ஒரு ஐடி பார்க் கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவேன். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பின்னர் மாலை தஞ்சை கிழக்கு ஒன்றியமான நீலகிரி ஊராட்சியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலையம் மீனாட்சி மருத்துவமனை அருகில் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் சண்.ராமநாதன் திருவள்ளுவர் நகர், திருவேங்கடம் நகர், கலைஞர் நகர், ரகுமான் நகர், அருட்பிரகாசம் நகர், மானோஜிப்பட்டி தெற்கு, மானோஜிப்பட்டி, ஜெயலெட்சுமி நகர், ராஜாஜி நகர் பகுதியில் திறந்த ஜீப்பில் ஒவ்வொரு தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மாடியில் இருந்து பூக்கள் தூவி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தன் பிரச்சார வாகனத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் ஆர்வத்துடன் குழந்தைகள், சிறுமிகள் ஓடி வந்து கையசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர். சிறுமிகள் பிரச்சார வாகனத்தில் ஏறி கையசைத்து உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் மென்மையான சிரிப்பு மற்றும் பேச்சால் கவர்ந்து இழுத்து வருகிறார் வேட்பாளர் சண்.ராமநாதன்.