சென்னை: குழந்தைகளை அடம்பிடிக்க சொல்லி வாக்கு சேகரித்ததாக தவெக தலைவர் விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் தமிழ் நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். சென்னையில் கடந்த 21ம் தேதியன்று நடைபெற்ற இறுதிகட்ட பரப்புரையில் பேசிய விஜய், பெற்றோரிடம் குழந்தைகள் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக கோவை கணபதி பகுதியை சேர்ந்த விசிக தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் காவல் ஆணையாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் தனது 5 வயது மகன் விஜய்க்கு வாக்களிக்க கோரி அடம் பிடித்ததாகவும் இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்று பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ள அவர், தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர் பேசிய வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.