தஞ்சாவூர்: பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நகைக்கடனையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.