நெல்லை: நெல்லையில் உயிரிழந்த செல்ல நாய்க்கு மனிதர்களைப் போல கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து உரிமையாளர் அஞ்சலி செலுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்லை பேட்டை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த சிவா, செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது வீட்டில் வேட்டை இன நாய்கள், புறாக்கள் மற்றும் வாத்துகளை வளர்த்து வந்தார்.
அவரது செல்ல நாய்களில் ‘குட்டி’ என பெயரிடப்பட்ட நாய் மிகவும் நெருக்கமானதாக இருந்தது. உடல்நலக்குறைவால் அந்த நாய் திடீரென உயிரிழந்தது.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சிவா, தனது சகோதரரை இழந்தது போன்ற உணர்வில் நண்பர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டார். பின்னர் மனிதர்களுக்கு வைப்பதைப் போல தனது செல்ல நாய்க்கு படத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனர் தயாரித்தார்.
‘குட்டி உன்னை தவற விட்டுவிட்டோம். மறக்க முடியாத நினைவு நீ குட்டி (எங்கள் சகோதரர்)’ என்ற வாசகத்துடன் தயாரிக்கப்பட்ட பேனர், நெல்லை பேட்டை செக்கடி பேருந்து நிறுத்தம் மற்றும் தெருமுனைகளில் வைக்கப்பட்டது. பேனருக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
செல்ல நாயின் மீது உரிமையாளர் காட்டிய பாசம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.