புதுடில்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயரிய மத்திய அரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மெயின் தேர்வை எழுத 13,343 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு, நாட்டின் மிக உயரிய போட்டித் தேர்வுகளில் ஒன்றாகும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர்நிலைப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு இந்தத் தேர்வின் மூலம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான 1,016 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 24-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 5.49 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, அடுத்த கட்டமான மெயின் தேர்வை எழுத 13,343 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 656 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஜூன் 19 முதல் 28-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் மெயின் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வின் அடுத்த கட்டமான மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.