புதுச்சேரி: நகரப் பகுதிகளில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டிப்பர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி. திவ்யா தலைமையில் கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸாருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுச்சேரியில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் வேகமாக இயக்கப்படும் கனரக வாகனங்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாகவும் எஸ்.பி. திவ்யா தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும்போது அவற்றை முழுமையாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், லாரிகளில் ஓட்டுநர்களுடன் கிளீனர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார். ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் வாகன உரிமையாளர்கள் கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
போக்குவரத்து போலீஸார் மேற்கொள்ளும் திடீர் சோதனைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வழக்குப்பதிவு மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் 10 மணி, மாலை 4 முதல் 7 மணி வரையிலான தடை நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
