சென்னை: ‘டி.சி.’ திரைப்படத்தில் நடித்தபோது, “இந்த மாதிரியான கதாபாத்திரம் அவசியம்தானா? ஒருமுறை யோசித்துப் பார்க்கலாமே” என பலரும் தன்னிடம் கூறியதாக நடிகை வாமிகா கபி தெரிவித்துள்ளார். ஆனால், அந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களால் பேசப்படும் என்ற நம்பிக்கையுடன் தான் நடித்ததாகவும், தற்போது அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘டி.சி.’ திரைப்படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். படம் வெளியானதைத் தொடர்ந்து அவரது கதாபாத்திரத்துக்கும் நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏற்கெனவே தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ திரைப்படத்தில் நடித்திருந்த வாமிகா கபி, தற்போது ‘டி.சி.’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக அவரது கதாபாத்திரம் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து வாமிகா கபி கூறுகையில், “படத்தில் நடிக்கும்போதே பலர் இந்த மாதிரியான கதாபாத்திரம் தேவையா என்று கேட்டார்கள். ஆனால் நிச்சயம் இந்த கதாபாத்திரம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை. இன்று செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் ‘சந்திரா… சந்திரா…’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். இதுதான் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்” என தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையுடன் கடின உழைப்பும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு தனது பயணம் ஒரு உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
