சென்னை: ‘பிரேமலு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை மமிதா பைஜுவின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.8 லட்சத்தில் தொடங்கியதாக கூறப்படும் அவரது சம்பளம் தற்போது ரூ.2 கோடியை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மமிதா பைஜு, ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பான்-இந்திய அளவில் பிரபலமானார். இப்படத்தில் அவர் நடித்த ‘ரீனு’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்காக அவருக்கு சுமார் ரூ.8 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அவரது மார்க்கெட் மதிப்பு வேகமாக உயர்ந்தது.
தமிழில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மமிதா, அந்த படத்துக்காக சுமார் ரூ.75 லட்சம் சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா ரூ.2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
‘பிரேமலு’ படத்துக்காக கூறப்படும் ரூ.8 லட்சத்துடன் ஒப்பிடும்போது, தற்போது ரூ.2 கோடி என்பது சுமார் 25 மடங்கு உயர்வாகும். ‘டியூட்’, ‘காரா’, ‘ஜன நாயகன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழிலும் கவனம் பெற்றுள்ள மமிதாவுக்கு தெலுங்கிலும் பெரிய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தற்போது ஒரு படத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
