சென்னை: மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை 51 வயதில் நனவாக்கியுள்ளார் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார். நீட் தேர்வில் 192 மதிப்பெண்கள் பெற்று, சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
2026-27ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 7,157 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,383 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு 72,627 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியது. சிறப்பு பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 224 இடங்கள் இருந்த நிலையில், 108 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்தப் பிரிவில்தான் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்குமார் எம்.பி.பி.எஸ். சேர்க்கை ஆணையை பெற்றார்.
தமிழ் வழியில் படித்த சுரேஷ்குமார், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், மருத்துவம் படிப்பது தனது நீண்ட நாள் கனவு என தெரிவித்துள்ளார். தனது இரண்டு மகன்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். குடும்பத்தினரின் ஆதரவும் தனக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களான நிகில் ஸ்ரீராம், நிக் ஷிதா ஆகியோரும் விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றுள்ளனர். வுஷூ தற்காப்புக் கலை வீரர்களான நிகில் ஸ்ரீராம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியிலும், நிக் ஷிதா சேலம் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெற்றுள்ளனர்.
