புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலராக நீதித்துறை செயல்பட்டு வருவதாகவும், நீதித்துறை எந்தவொரு தரப்புக்கும் ஆதரவாக செயல்படாது என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
டிடி நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், நீதித்துறை ஆளும் தரப்புக்கோ அல்லது எதிர்த் தரப்புக்கோ ஆதரவாக முடிவுகளை எடுப்பதில்லை. அரசியலமைப்பு மற்றும் அதன் அடிப்படை விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றார்.
சமத்துவம், கண்ணியம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக மாண்புகள், சுதந்திரமான நீதித்துறை உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாத்து பலப்படுத்துவதே இந்திய நீதித்துறையின் முக்கிய பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சூழ்நிலைகள் மாறினாலும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மாறாமல் நீடிக்க வேண்டும். அதனை மதித்து பாதுகாப்பதுடன் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
வழக்குகள் நிலுவை குறித்து கவலை
நீதித்துறையில் வழக்குகள் நிலுவையில் இருப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் அவர் கூறினார். வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பது நியாயமானது என்றாலும், ஒவ்வொரு வழக்குக்கும் ஒரே காலவரையறையை நிர்ணயிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
வழக்குகளுக்கு காலவரையறை நிர்ணயிப்பது குறித்து குழு அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய காலவரையறையை நிர்ணயிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
