சென்னை: நதிநீர் பிரச்னைகளை பங்கீடு என்ற நிலையிலிருந்து ஒத்துழைப்பு என்ற நிலைக்கு மாற்ற வேண்டிய நேரம் இது என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென்மண்டல முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தென்மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய டி.கே.சிவக்குமார், தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது என்றார். ஆறுகளுக்கு அரசியல் எல்லைகள் தெரியாது என்றும், கர்நாடகா பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும் மதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பே கர்நாடகாவின் முக்கிய கொள்கைகள் என்றார்.
மேகதாது அணை திட்டம் குறித்து பேசிய சிவக்குமார், இந்த அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் முக்கியமான திட்டம் எனத் தெரிவித்தார். பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள தண்ணீர் முறைப்படி தமிழகத்திற்கு சென்றடையும் என்றும் கூறினார்.
