சென்னை: மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு வலியுறுத்தியுள்ளது.
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டதாகக் கூறப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் சிந்தனை, கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களும் இளைஞர்களும் நாட்டின் குடிமக்களே என்பதால் அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது என்றும் கட்சி தெரிவித்துள்ளது.
மாணவர்களின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை தடுப்பதற்கு பதிலாக, கல்வி நிறுவனங்களில் ஜனநாயக மாண்புகள், சமூகநீதி, மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள கல்வி நிறுவன மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
