சென்னை: தமிழ்நாட்டில் உணவு தானியங்களை சேமிப்பதற்காக 13 மாவட்டங்களில் மொத்தம் 31 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அரியலூர், நாமக்கல் மற்றும் மேட்டுப்பாளையம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3,400 டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 10 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தொழிலாளர் ஓய்வறை வசதிகள் ரூ.1.89 கோடியில் ஏற்படுத்தப்படும். மேலும், 17 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் ரூ.12.61 கோடி மதிப்பீட்டில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
18 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தானியங்களின் முழுநேர கண்காணிப்பை உறுதி செய்ய ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
மேலும், தானியங்களை அட்டிகளாக அடுக்கும்போது தரை வழியாக ஈரப்பதம் தாக்காமல் இருக்கவும், காற்றோட்ட வசதியை ஏற்படுத்தவும் 12 சேமிப்பு கிடங்குகளுக்கு 6 ஆயிரம் அட்டிக் கட்டைகள் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
