சென்னை: மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டதை சுட்டிக்காட்டி, தவெக அரசை திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கை கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியான நிலையில் பின்னர் திரும்பப் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா அல்லது முதலில் தனது அரசியலை செயல்படுத்த முயன்று, எதிர்ப்பு எழுந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு அரசு பின்வாங்குகிறதா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
