சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் மற்றும் மாதந்தோறும் ஓட்டுநர், உதவியாளர் படியாக ரூ.1 லட்சம் வழங்கும் அறிவிப்புக்கு நடிகை கஸ்தூரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி, தனது தொகுதியில் மக்களை சந்தித்து பணியாற்ற போதிய வாகன வசதி இல்லை என்றும், உதவியாளருக்கு ஊதியம் வழங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வசதி ஏற்படுத்துவதற்காக வாகனப்படி மற்றும் உதவியாளர் படியாக மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவில், எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் ஓட்டுநர் படியும், ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியும் வழங்குவது தேவையற்ற ஆடம்பரச் செலவு என விமர்சித்துள்ளார்.
மேலும், எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே பல்வேறு சலுகைகள் உள்ள நிலையில், கூடுதல் செலவை அரசு மேற்கொள்வது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
