சென்னை: தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வானம்’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ஜாஸ்மின் பாசின். தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
‘ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது பஞ்சாபி மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படங்களைத் தவிர தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்கள், இசை வீடியோக்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தற்போது ‘கத்ரோன் கே கிலாடி’ 15-வது சீசனில் போட்டியிட்டு வரும் ஜாஸ்மின் பாசின், சாகசம் ஒன்றின்போது விபத்தில் சிக்கினார்.
மேலிருந்து நீரில் குதிக்கும் சவாலின்போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு லேசான மூளையதிர்ச்சி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 72 மணி நேரம் முழுமையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார். விபத்துக்குப் பிறகு உடனடியாக என்ன நடந்தது என்பது தனக்கு நினைவில் இல்லை என்றும், அந்த அனுபவம் மிகவும் எதிர்பாராததாக இருந்ததாகவும் ஜாஸ்மின் பாசின் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ரோஹித் சார், சேனல், தயாரிப்பு நிறுவனம், பாதுகாப்புக் குழுவினர் மற்றும் மருத்துவர்கள் தனக்கு முழுமையான ஆதரவு அளித்ததாகவும் அவர் கூறினார். இதற்கு முன்பு ‘கத்ரோன் கே கிலாடி’ 9-வது சீசன் மற்றும் ‘கத்ரோன் கே கிலாடி: மேட் இன் இந்தியா’ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜாஸ்மின் பாசின், முறையே 7-வது மற்றும் 2-வது இடங்களை பிடித்திருந்தார்.
