சென்னை: மொபைல் போன் மற்றும் பிளேஸ்டேஷனில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் கேம்ஸ் விளையாடியதாலும், நீண்ட நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்தியதாலும் கழுத்துத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.
‘மைல்ஸ்டோன் மேக்கர்ஸ்’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், நீண்ட நேரம் ஒரே நிலையில், குறிப்பாக படுக்கையில் ஒருபுறமாக படுத்துக் கொண்டு மொபைல் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக காலப்போக்கில் கழுத்துத் தண்டுவடத்தில் டிஸ்க் பிரச்சினை ஏற்பட்டதாகவும், வலி அதிகரித்ததால் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறினார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அதற்கு சம்மதித்ததாக தெரிவித்தார்.
அறுவை சிகிச்சையின்போது இரண்டு எலும்புகளுக்கு இடையே டைட்டானியம் சிப் பொருத்தப்பட்டு, திருகுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதி நிலைப்படுத்தப்பட்டதாகவும், இதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் ஷகிலா தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகள் செல்போனில் செலவிடும் நேரத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
“அத்தியாவசியமான விஷயங்களுக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்துங்கள். தேவையில்லாத வீடியோக்களை பார்ப்பதைத் தவிருங்கள். இல்லையென்றால் பணத்தை இழப்பதுடன், தாங்க முடியாத வலியையும் அனுபவிக்க நேரிடும்” என அவர் எச்சரித்துள்ளார்.
