கொழும்பு: இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் துருவ் ஜூரல் 115 ரன்கள் விளாசி சதம் அடித்தார். சதத்தைத் தொடர்ந்து தனது கையில் பச்சை குத்தியிருந்த ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற வாசகத்தை கேமரா முன் காட்டி தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
துருவ் ஜூரல் சதம் அடித்ததும், இடது கையின் மேற்பகுதியில் ஹிந்தி மொழியில் பச்சை குத்தியிருந்த ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற வாசகத்தை ரசிகர்களுக்கு காண்பித்தார்.
இந்த வாசகம் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களையும், நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளையும் போற்றும் வகையில் அமைந்துள்ளது.
துருவ் ஜூரலின் தந்தை ராணுவ வீரர் என்பதுடன், அவரது தாத்தா விவசாயி எனவும் கூறப்படுகிறது. இதனால் தனது குடும்பத்தின் இரு தலைமுறையினரின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்த வாசகத்தை டாட்டூவாக வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
போட்டியில் அரைசதம் அடைந்தபோதும் ஜூரல் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் அடித்து கொண்டாடினார்.
சதத்துக்குப் பிறகு பேசிய ஜூரல், “எனது தாத்தா ஒரு விவசாயி; எனது தந்தை ராணுவ வீரர். எனது வேர்களை ஒருபோதும் மறக்க விரும்பவில்லை. அவர்களை வணங்கும் விதமாகவே சதம் அடித்தபோது அப்படி கொண்டாடினேன்” என்றார்.
