சென்னை: அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இன்று மாலை அப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாட்களில் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 நாட்களில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் இடம், அதன் வலிமை மற்றும் நகரும் திசையைப் பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் மழை மற்றும் காற்றின் தாக்கத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
