தஞ்சாவூர்: சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தஞ்சாவூருக்கு சரக்கு ரயில் மூலம் 1,462 டன் யூரியா உரம் நேற்று கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதுதவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
பயிர்களின் சாகுபடிக்கு தேவையான உரங்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு, வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் யூரியா உள்ளிட்ட உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,462 டன் யூரியா உரம் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. 25 வேகன்களில் கொண்டு வரப்பட்ட உர மூட்டைகள் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து இந்த உரம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பா சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உர விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
