சென்னையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை விமான நிலையம் வெறும் ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரில் 4 ஆயிரம் ஏக்கரிலும் விமான நிலையம் உள்ளது. சென்னை வளர்ந்து வரும் நிலையில், ஆயிரம் ஏக்கரில் எப்படி விமான நிலையத்தை நடத்த முடியும். சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு இரண்டரை கோடி பயணிகளை கையாளுகிறது.
இது அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளாக அதிகரிக்கும். எனவே சென்னைக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் விமான நிலையத்திற்கான இடத்தை மாநில அரசே தேர்வு செய்கிறது. 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூர், மாமண்டூர் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. 2021-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மாமண்டூரை அகற்றிவிட்டு, பரந்தூர், பண்ணூரை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பியது.
மாநில அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து மத்திய அரசு பல ஆய்வுகளை மேற்கொண்டுதான் பரந்தூரை தேர்வு செய்தது. அதிமுக, திமுக இரண்டு அரசுகளும் அனுப்பிய பட்டியலில் பரந்தூர் இடம் பெற்றிருந்தது. இடம் தேர்வு செய்வதில் மத்திய அரசுக்கு ஒரு சதவீதம் கூட பங்கு இல்லை. சென்னைக்கு அருகில் விமான நிலையம் தேவை என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அதை எங்கு கட்டுவது என்பதை தேர்வு செய்வது மாநில அரசின் பொறுப்பு.
சென்னைக்கு அருகில் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் கூறுகிறாரா? விமான நிலையம் தேவைப்பட்டால், அவர் எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பார்? ஏனென்றால், பரந்தூரில் மக்களைச் சந்தித்த விஜய், வேறு எங்கு விமான நிலையம் கட்டுவது என்பதற்கும் தீர்வைக் கொடுத்திருக்க வேண்டும். டங்ஸ்டன் பிரச்சினை வேறு விமான நிலைய பிரச்சினை வேறு. எனவே, பிரச்சினைகளை ஆக்கபூர்வமாகக் கையாண்டு தீர்வுகளை வழங்குபவர்களே நல்ல அரசியல்வாதிகளாக மாறுவார்கள்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றப் போகிறாரா அல்லது எரியும் தீயை அணைத்து தீர்வு வழங்கப் போகிறாரா விஜய்? நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடமாக விஜய் ஏன் பரந்தூருக்கு செல்லவில்லை. இத்தனை நாட்களாக அவர் என்ன செய்தார், விஜய் மக்களை சந்திப்பது அரசியலா அல்லது ஆக்கபூர்வமான அணுகுமுறையா, ஜனவரி 22-ம் தேதி டங்ஸ்டன் பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து நிரந்தர தீர்வு கொடுக்க உள்ளோம். யுஜிசி வரைவு வழிகாட்டுதல்களை பாஜக வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.