சென்னை: நடிகர் அஜித் குமார் மோட்டார் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற சொந்த அணியை உருவாக்கி பல்வேறு சர்வதேச தொடர்களில் களமிறங்கி வருகிறார்.
இந்நிலையில், ஐரோப்பாவில் நடைபெற்று வரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் அஜித்தின் அணி பங்கேற்றது. போட்டியின்போது அஜித் ஓட்டிய ரேஸ் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காரின் மீது பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்ததுடன், சக்கரங்கள் உள்ளிட்ட சில முக்கிய பாகங்களிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
எனினும், ரேஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த நவீன பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அஜித்தின் நீண்டகால பந்தய அனுபவம் காரணமாக அவர் காயமின்றி காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.
விபத்து குறித்த தகவல் பரவியதும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் காயமின்றி நலமாக இருப்பதாக தகவல் வெளியானதும் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஏற்கனவே இத்தாலி, ஸ்பெயின், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் பந்தயம் மற்றும் பயிற்சியின்போது அஜித் விபத்துகளை சந்தித்துள்ளார்.
