சென்னை: அடுத்தடுத்த பிரமாண்ட படங்கள்… ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2028-ஆம் ஆண்டு வரை அவர் நடிக்கவுள்ள அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களின் பட்டியல் மற்றும் கமல் ரஜினி இணையும் மெகா கூட்டணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஒவ்வொரு படத்தின் போதும் ‘இதுதான் கடைசி படம்’ என்கிற விவாதத்தை கிளப்புவது வழக்கமாகிவிட்டது. அண்மைக்காலமாக அவர் உடல்நிலை மற்றும் வயது மூப்பைக் காரணம் காட்டி, ரஜினி விரைவில் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவின.
ஆனால், இந்த வதந்திகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தலைவர் செம பிஸியாக இருக்கப்போகும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படத்தில் ரஜினிகாந்த் தீவிரமாக நடித்து வருகிறார். முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் பாகத்தில் ரசிகர்களுக்கு இன்னும் கூடுதலான ஆக்சன் விருந்து காத்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ‘டான்’ பட புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி தனது 173வது படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. முக்கியமாக, இந்தப் படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தற்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே திரையில் தோன்றவுள்ளனர். ‘தலைவர் 173’ ரிலீசுக்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக, ‘படையப்பா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. இந்தப் படத்தின் கதையை ரஜினிகாந்தே முழுமையாக எழுதி முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், “அப்பாவிடம் அற்புதமான கதை ஒன்று உள்ளது, அவர் கண்டிப்பாக அதில் நடிப்பார். ஆனால் அந்தப் படம் எப்போது தொடங்கும், யார் இயக்குவார் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று ஒரு சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.
ரஜினிகாந்தின் தற்போதைய லைன்-அப் படி பார்த்தால், அவர் குறைந்தது 2028-ஆம் ஆண்டு வரை சினிமாவில் மிகத் தீவிரமாகச் செயல்படப்போகிறார். ‘வேட்டையன்’ கொடுத்த வெற்றியும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தலைவரை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.