மும்பை: வளர்ந்து வரும் பெண்கள் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் ஆண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு தொடர்களிலிருந்தும் இந்திய அணி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்க பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொஹ்சின் நக்வி உள்ளார்.

அவர் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இதன் காரணமாக, ஆசிய கோப்பையிலிருந்து பிசிசிஐ விலக முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், ஆசிய கோப்பையிலிருந்து இந்திய அணி விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கையில், “ஆசிய கோப்பை அல்லது வேறு எந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிகழ்வு குறித்தும் நாங்கள் விவாதிக்கவில்லை அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில், எங்கள் கவனம் ஐபிஎல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் இங்கிலாந்து தொடரில் மட்டுமே உள்ளது” என்று கூறினார்.