புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர் ஆர்வலர் நிஷு ஆசாத்தின் தந்தையை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் சுதந்திரா பரத்வாஜை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுதந்திரா பரத்வாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பு போராட்டமும் நடைபெற்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பரத்வாஜ் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படும் நிலையில், அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
