கேரள மாநில பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆளுநரின் கடமைகள்’ குறித்த புதிய பாடம் சேர்க்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ‘ஜனநாயகம்: இந்திய அனுபவம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடம், மாணவர்களுக்கு அரசியல் அமைப்பின் அடிப்படை கூறுகளை விளக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓணம் விடுமுறைக்குப் பிறகு புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த மாற்றம், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு இடையேயான அண்மைய கருத்து மோதல்களை அடுத்தே ஏற்பட்டது. முக்கியமாக ஆளுநரின் செயற்பாடுகள், அரசு நிகழ்ச்சிகளில் பாரத மாதா உருவப்படம் வைக்கப்பட வேண்டுமென கூறிய விவகாரம், மற்றும் அமைச்சர்கள் சிலர் நிகழ்ச்சிகளில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவங்கள் உள்ளிட்டவை பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இதனையடுத்து பள்ளிக் கல்வி அமைச்சகம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி புதிய பாடம் சேர்க்கும் முடிவை எடுத்தது.
பாடத்திட்ட மாற்றம் குறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஆலோசனையும் நடத்தப்படுகிறது. அரசியலமைப்பின் முக்கியத்துவம் மற்றும் ஆளுநரின் சட்டபூர்வ பொறுப்புகளை மாணவர்களுக்கு தெளிவாக அறிய செய்வது பாடத்தின் நோக்கமாகும். இது தவிர, 2, 4, 6 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் இந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கமாக கற்றுத் தரும் வகையில் பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படும்.
மேலும், தேர்தல் நிதி பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்டமைப்பைப் பள்ளிக் கட்டடங்களிலேயே மாணவர்கள் உணர வேண்டும் என்பதே கல்வித் துறையின் நோக்கம் என அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார். கல்வியின் வழியாக அரசியல் விழிப்புணர்வும் சட்ட ஒழுங்கின் முக்கியத்துவமும் மாணவர்களில் விதைக்கப்படுவதை அரசு முன்னிட்டுள்ளது.