சென்னை: சமையலில் சேர்க்கும் ஓமத்திற்கு மணம் மட்டுமின்றி மருத்துவ குணங்களும் உண்டு.
நீரை கொதிக்க விட்டு அதில் ஓமம், புதினா, எலுமிச்சை சாறு சிறிது கலந்து இந்துப்பு சிறிதளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் ஜீரண சக்தி கிடைக்கும். சளி, இருமல் தீரும்.
வெற்றிலையில் ஓமம் வைத்து, மென்று தின்றால் வாயு கோளாறு தீரும். அரை ஸ்பூன் ஓமத்தை நீரில் கலந்து கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்த்து குடித்தால் பசி உணர்வு கூடும்.
குடலில் தங்கும் புழுக்களை வெளியேற்றும் குணம் கொண்டது ஓமம். சாப்பிட்டவுடன் ஏற்படும் நெஞ்செரிச்சல், எதுக்களித்தல் போன்றவை, மோரில் ஓமம், பெருங்காயம் சேர்த்து குடித்தால் சரியாகிவிடும்.
நீரில் ஓமம் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து பருக, சளி பறந்து விடும். மூக்கடைப்பு வந்தால், ஓமத்தை பொடித்து, துணியில் கட்டி முகர்ந்தால், மூக்கடைப்பு அகன்று விடும். கருவேப்பிலை, கட்டி பெருங்காயம், சிறிது ஓமம் இவற்றை வறுத்து, பொடித்து, உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், மேனி மினுமினுக்கும். வறட்சி நீங்கும்.
ஓமப்பொடி என்று பெயர் பெற்ற தின்பண்டத்தில் ஓமம் சேர்ப்பதால், மந்தம், வாயுக் கோளாறு ஏற்படுவதில்லை. மோர்க் குழம்பு, தயிர் சாதம் இவற்றில், கடுகுடன் ஓமம் சேர்த்து தாளித்தால், மணமாக இருக்கும். பசியைத் தூண்டும். எளிதில் ஜீரணம் ஆகும்.
வடகத்தில் ஓமத்தை அரைத்து கலந்தால், குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணம் ஆகும். வாசனையாகவும் இருக்கும். ஓமம், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும்.