சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவு காலத்தில், எதையும் பகுத்தறிந்து சிந்திக்கும் திறனையும், சரியான கேள்விகளைக் கேட்கும் திறனையும் கொண்ட தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்களின் மிகப்பெரிய பணியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க ஆசிரியர் தினத்தில் அனைவரும் உறுதிகொள்வோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
