சென்னை: விருப்ப மனு விற்று தீர்ந்தது… சினிமா ‘பிளாக் டிக்கெட்’ போல, தவெக விருப்ப மனு வினியோகம் துவங்கிய, ஒன்றரை மணி நேரத்தில், 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. விருப்ப மனுவை வாங்க வந்தவர்களில் பலரும், கையில் வைத்திருந்த விசிலை ஊதிக் கொண்டே இருந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினருக்கு, விருப்ப மனு வினியோகம், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் துவங்கியது. தவெக தலைவர் ஜோசப் விஜய் என்ற பெயரில் முதல் மனுவை, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.
வழக்கமாக, அதிமுக, திமுக போன்ற கட்சிகள் விருப்ப மனு, 10,000 முதல் 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆனால், தவெகவில் விருப்ப மனு கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. விருப்ப மனுவை நிரப்பி கொடுக்கும் போது, பொது பிரிவினர், 10,000 ரூபாயும், பட்டியலின பிரிவினர், 5,000 ரூபாயும் கொடுக்க வேண்டும்.
அதுகுறித்து தெரியாமல், தவெகவினர் கட்டுக்கட்டாக மனுக்களை வாங்கினர். பெரும்பாலும், விஜய் பெயரிலேயே அவை வாங்கப்பட்டன. அதனால், விருப்ப மனு வினியோகம் துவங்கிய ஒன்றரை மணி நேரத்தில், 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன.
விருப்ப மனுவில், ஜாதி சங்கங்களில் இருந்தால் அதன் விபரம், தாய்மொழி, வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட விபரம், சொத்து விபரம் உள்ளிட்ட, 37 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.