கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே நல்லூரான்பட்டியில் மத்திய அரசின் மானிய விலை உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டிய அரசு மானிய உரங்கள் வேறு சாக்குப் பைகளுக்கு மாற்றப்பட்டு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கீடு
நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் மத்திய அரசின் உர மானியத் திட்டத்துக்கு 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு காரிஃப் பருவத்துக்காக மட்டும் ரூ.41,534 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அவை சட்டவிரோதமாக பதுக்கப்பட்டால், விவசாயிகள் அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முறைகேடு மீது கடும் நடவடிக்கை வேண்டும்
மானிய விலையில் கிடைக்க வேண்டிய உரங்கள் வெளிச்சந்தைக்கு திருப்பிவிடப்பட்டால், விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் புகார்கள் எழுந்துள்ளதாகவும், தற்போதைய சம்பவம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் கோவை திருமலையாம்பாளையம் அருகே உள்ள குடோனில் மானிய உர மூட்டைகள் டன் கணக்கில் பதுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியானபோதே அரசை எச்சரித்ததாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாஜக விவசாய அணி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியப் பொருட்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே விவசாய அமைப்புகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
