சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வரும் 3ம் தேதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூரில், மக்கள் செயல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அதிபராக தர்மன் சண்முகரத்தினம் உள்ளார். பிரதமராக லாரன்ஸ் வோங்க் உள்ளார். இந்த நிலையில், பிரதமரிடன் ஆலோசனை நடத்தியபின் அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்கு பொதுத் தேர்தல் மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும். உலக அளவில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தேர்தல் நடைபெற இருக்கிறதுஇந்த தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் கடந்த தேர்தலில் வாக்காளர்களின் அதிருப்தியால் சற்று பின்னடைவைச் சந்தித்ததால், அதை சரிசெய்து வலுவான வெற்றியைப் பெற தற்போதைய பிரதமரும் கட்சியின் தலைவருமான லாரன்ஸ் வோங் திட்டமிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (PAP) கட்சி நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் வரும் தேர்தலில் அவர்களே வாகை சூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் (WP) அவர்களுக்கு போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த முறை 97 இடங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.