தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு வனத் துறை சார்பில் ஈரநில பறவைகள் முதல் கட்ட கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இரு நாள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் வனச் சரகம் சார்பில் மாவட்டத்தில் முதல் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு நடைபெற்றது.
இப்பணியில் இவர்களுடன் அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) அமைப்பினரும் இணைந்து மேற்கொண்டனர். இப்பணிகள் கல்லணை, கள்ளப்பெரம்பூர் ஏரி, தென் பெரம்பூர், சமுத்திரம் ஏரி, மாறனேரி, செல்லப்பன் பேட்டை, அல்லூர் ஏரி உள்ளிட்ட 7 முக்கிய ஈரநிலப் பகுதிகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணியை மாவட்ட வன அலுவலர் கே. கார்த்திகேயனி பார்வையிட்டு வழிகாட்டினர். இக்கணக்கெடுப்பு காலத்தில் பல்வேறு வகையான ஈரநில பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முழுமையான பறவைகள் பட்டியல் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு வனத்துறை மூலமாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இப்பணியில் தஞ்சாவூர் வனச்சரகர் ஜோதிகுமார், வனவர்கள் இளையராஜா, மணிமாறன், ரவிக்குமார், தனலட்சுமி, அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனர் ஆர். சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், விஷ்வா, பெஞ்சமின் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், வனக் களப்பணியாளர்கள், அறக்கட்டளையினர் பங்கேற்றனர்.