ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா அறிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ‘‘நாங்கள் மாநிலத்தில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும்.
எங்களின் கட்சி என்றும் தெலங்கானா மக்களின் கட்சி என்றும் நாங்கள் நினைத்த பிஆர்எஸ், பல விஷயங்களில் எங்களை கைவிட்டு விட்டது. எங்கள் லட்சியங்களை அது நிறைவேற்றவில்லை. புதிய கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்’’ என தெரிவித்தார்.
தெலங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் கவிதா, அந்த அமைப்பையே அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.