பெருந்துறை: த.வெ.க.வை நம்பி கட்சியில் இணையும் அனைவரையும் அரவணைப்போம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதே த.வெ.க. அரசின் முக்கிய இலக்கு என கூறினார்.
அரசு மருத்துவமனைகளின் தேவைகளை ஆய்வு செய்து அவற்றை நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தை குறைத்தல், தூய்மையான கழிவறைகள், மலிவு விலை உணவகங்கள் உள்ளிட்ட வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஈரோட்டில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் ‘ஷாப்பிங்’ செய்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, எந்த கட்சியை எதிர்த்து உருவாக்கப்பட்டதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைத்து முதல்வராக வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடாக அந்த கருத்து இருப்பதாக கூறினார். மேலும், த.வெ.க.வை நம்பி வருவோரை தாங்கள் அரவணைப்போம் என பதிலளித்தார்.