சென்னை: டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து, தூத்துக்குடி – மூலக்கரை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் பதிவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது, என்.எச்.-32 சாலைத் திட்டத்தால் தூத்துக்குடி – மூலக்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக புதிய சாலை வழித்தடம் அமைக்கப்படுவதால் விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விவாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படும் 5 ஆண்டு பணி ஒப்பந்த வரம்பு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள கவலைகளையும் அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக கனிமொழி கூறியுள்ளார்.
விவசாய நிலங்கள், நீர்ப்பாசனம் மற்றும் பொறியாளர்களின் பணிச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
