சென்னை: சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தடத் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு மற்றும் அமலாக்க அறக்கட்டளையின் உயர்மட்ட கண்காணிப்புக் கூட்டத்தில் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான தேவைகளை எடுத்துரைத்தார்.
சென்னை முதல் திருவனந்தபுரம் வரை தொழில் வழித்தடம் அமைக்கப்பட்டால், அதன் வழித்தடத்தில் உள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்றும், தொழில் மையங்களை சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் இணைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் புதிய முதலீடுகள், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும், எனவே திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை–தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டிலேயே முன்மொழிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, தொழில் வழித்தடத்துக்கான சாத்தியக்கூறு மற்றும் பாதை ஆய்வுகளை தொடங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் முறையான கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
