சென்னை: 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தமிழக சட்டசபையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் பேசிய எ.வ.வேலு, தேர்தலின்போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுமா என்றும், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, பொதுக்கூட்டத்தில் பேசுவதைப் போல் தாங்கள் பேரவையில் பேசவில்லை என்றும், அரசு கூறியவற்றை நிறைவேற்றுமா என்றுதான் கேட்பதாகவும் தெரிவித்தார். மேலும், நான்காவது முறையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று கேட்பதாகவும் கூறினார்.
இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர் என்றும், ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
