புதுடில்லி: சீனா மற்றும் துருக்கியில் இருந்து 60 மணி நேர இடைவெளியில் பாகிஸ்தானுக்கு கனரக ராணுவ விமானங்கள் அடுத்தடுத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராவல்பிண்டி அருகே உள்ள நுார் கான் விமானப்படைத்தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத்தளங்களில் சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. இந்த விமானங்களில் பாகிஸ்தானுக்கான ராணுவ தளவாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் – சீனா இடையிலான ராணுவ உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு சீனாவை பாகிஸ்தான் பெரிதும் நம்பி வருகிறது.
இதற்கிடையில் போர் விமான மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த துருக்கியும் பாகிஸ்தானும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் சவுதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே சமீபத்தில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. ந்த சூழலில் சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது பிராந்திய பாதுகாப்பில் கவனம் பெற்றுள்ளது
