சென்னை: மேகேதாட்டு அணை கர்நாடகாவுக்காக மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பயன்பாட்டுக்காகவும் கட்டப்பட உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிப்பதாக குறிப்பிட்டார்.
கர்நாடகா நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் 42 சதவீதமும், விமானத் துறையில் 60 சதவீதமும் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார். 15-வது நிதிக்குழுவில் கர்நாடகாவுக்கான நிதிப் பகிர்வு 4.7 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக குறைக்கப்பட்டதால் ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொகுதி மறுவரையறையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழகம், கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேகேதாட்டு திட்டத்தில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் 5 டி.எம்.சி. நீரைத் தவிர, அணையில் தேக்கப்படும் மற்ற நீர் தமிழகத்துக்கு சென்றடையும் என சிவக்குமார் தெரிவித்தார். மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் தொடர்பாக தனியாக கூட்டம் நடத்தி சுமுகமாக தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
