இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்றும், இந்திய சந்தை குறியீடுகள் அதிக இறக்கத்துடன் நிறைவடைந்தன. இந்த வாரத்தில், நிப்டி 4.77% மற்றும் சென்செக்ஸ் 4.98% சரிந்துள்ளன, இது இரண்டு ஆண்டுகளுக்குள் இல்லாத அளவிலான வீழ்ச்சி ஆகும்.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு தொடர்பான கணிப்பின் காரணமாக, உலகளாவிய சந்தைகள் இறக்கத்தை சந்தித்தன. அதன் தாக்கம் இந்திய சந்தையில் பிரதிபலித்தது, பங்குகள் அதிக மதிப்பை பெற்றுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால், சந்தை குறியீடுகள் சரிந்து திருத்தத்துக்குள்ளானது.
நிப்டி குறியீட்டில் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் இறக்கம் கண்டன. ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 4% வீழ்ச்சி கண்டது. பொதுத்துறை வங்கி, ஐ.டி. துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 3% வீழ்ச்சி கண்டது. வாகன, எனர்ஜி மற்றும் உலோகத் துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் 2% சரிந்தன.
ஐந்து தொடர்ச்சியான வர்த்தக நாட்களில் சந்தை சரிவடைந்ததால், இந்த வாரத்தில் முதலீட்டாளர்கள் 18.43 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் 3,598 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றனர்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 0.96% குறைந்து 72.18 அமெரிக்க டாலராக பதிவாகி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா உயர்ந்து 85.04 ரூபாயாக இருந்தது.
நிப்டி 50 பங்குகளில், டாக்டர் ரெட்டீஸ், ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், நெஸ்லே இந்தியா, எச்.டி.எஃப்.சி. லைஃப் ஆகியவை அதிக ஏற்றத்தை கண்டன. அதேபோல், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், மஹிந்திரா & மஹிந்திரா, டிரென்ட் ஆகியவை அதிக இறக்கத்தை கண்டன.