சென்னை: நடிகை சவுகார் ஜானகியின் உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை வரை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
1950, 60-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக விளங்கிய சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
